இரண்டாம் உலகப்போரின் உளவாளி - இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நூர் இனாயத் கானுக்கு இங்கிலாந்தில் கௌரவம்!
இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டனின் உளவாளியாகப் பணிபுரிந்து உயிர் நீத்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நூர் இனாயத் கான் எனும் பெண்ணுக்கு நீல நிற முத்திரையை வழங்கிக் கௌரவித்துள்ளது இங்கிலாந்து.
பிரிட்டனில் பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்பைச் செய்தவர்களைக் கௌரவிக்கும் வண்ணம், அவர்கள் தொடர்புடைய இல்லங்கள், வரலாற்றுச் சிறப்பு மிக்க பகுதிகளில் அந்த நபர்களையும் அவர்கள் தொடர்புடைய நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் இங்கிலாந்தில் நிறுவப்படும் நினைவுச் சின்னம் தான் ’நீலப் பலகை’ என்று அழைக்கப்படும் ப்ளூ ப்ளேக் முத்திரை.
இங்கிலாந்தின் கலாச்சாரத்துறையைச் செர்ந்த இங்கிலீஷ் ஹெரிடேஜ் அமைப்பு இந்தப் பலகைகளை நிறுவிப் பராமரித்து வருகிறது. லண்டன் நகரில் காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல் போன்றோர் தங்கியிருந்த இல்லங்களுக்கு முன் நீலப் பலகை நிறுவப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல் முறையாக ஐந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கௌரவமிக்க நீலப் பலகை நிறுவப்பட்டுள்ளது.
திப்பு சுல்தானின் வம்சாவளியைச் சேர்ந்தவர் நூர் இனாயத் கான். இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டனின் சிறப்பு உளவுப் பிரிவில் ரகசிய உளவாளியாகச் செயல்பட்டார். பிரான்சை ஜெர்மனி கைப்பற்றியபோது உலவு பார்க்க பிரான்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு வானொலி இயக்குநராக மாடலீன் எனும் பெயரில் பணியாற்றி லண்டனுக்குத் தேவையான உளவுத் தகவல்களை அனுப்பி வந்தார். இவர் 1944 - ம் ஆண்டு தனது 30 வது வயதில் ஹிட்லரின் நாசிப் படையால் கைது செய்யப்பட்டார். நாசி வதை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்ட நூர் இனாயத் கான் பத்து மாதங்கள் சித்ரவதை செய்யப்பட்டார். ஆனாலும், கடைசி வரை அவரிடமிருந்து எந்தவொரு தகவல்களையும் நாசிப் படையால் பெற முடியவில்லை. கடைசில் அவர் சுட்டுக்கொள்ளப்பட்டார்.
இவரின் தியாகத்தைப் போற்றும் வகையில், லண்டனில் கடைசியாக அவர் வாழ்ந்த கட்டடத்தில் பெயருடன் ஊதா முத்திரையை நிறுவி கௌரவித்துள்ளது இங்கிலாந்து.
Comments